சிறப்புச் செய்தி

பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டுகள் கட்டுவதற்கு அனுமதி மறுப்பு

29/12/2025 07:37 PM

பத்துமலை, டிசம்பர் 29 (பெர்னாமா) -- சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டுகள் மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் கவலை தெரிவித்திருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரை முன்னிறுத்தியே பத்துமலைத் திருத்தலத்தில் மின் படிகட்டுகள் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராடி வந்த நிலையில் மீண்டும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

''அவர்கள் எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை.ஒருவேளை மின் படிக்கட்டுகள் கட்ட பணம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் பல்நோக்கு மண்டபம் கட்டவும் பணம் கேட்க மாட்டோம்'' என்றார் டான் ஶ்ரீ ஆர். நடராஜா.

ஆலயத்தில் மின் படிகட்டுகள் அமைப்பது குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை இதற்கு முன்னரே தமது தரப்பு மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்த நிலையில் முறையான பதில் கிடைக்காத காரணத்தால் அத்திட்டம் முடக்கம் கண்டிருந்தது.

இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக ஆலயத்திற்கு வருகைப் புரிந்து பார்வையிட்ட பின்னர் இவ்விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த நிலையில் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியதாக டான் ஶ்ரீ நடராஜா கூறினார். 

இது குறித்து மேல் முறையீடு செய்யப்படவிருக்கும் நிலையில் அடுத்தாண்டு தைப்பூசத்திற்குள் அரசாங்கத் தரப்பிலிலிருந்து சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என்ற தமது ஆவலையும் அவர் வெளிப்படுத்தினார்.

பத்துமலை ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகப் பெருமான் சிலையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா குறித்து இன்று பத்துமலை திருத்தல மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே பத்துமலை முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் விழா வரும் ஜனவரி முதலாம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அச்சிலைக்குச் சாயம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி தரும் நிலையில் இவ்விழா காலை மணி 7 முதல் இரவு மணி 9 வரை பல அம்சங்களோடு கோலாகலமாக நடைபெறவுள்ளதாகத் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா விவரித்தார்.

''இந்த முருகன் சிலையில் சில பழுது மற்றும் வர்ணம் பூசும் பணிகள் செய்யப்பட்டு எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதியில் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. மேலும், மக்கள் அனைவரும் 140 அடி உயரம் உள்ள முருகன் சிலைக்கு மேல் சென்று பண்ணீர் அமிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார் டான் ஶ்ரீ ஆர். நடராஜா.

மேலும், பக்தி இசை நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல கலைஞர்களுடன் மலேசிய கலைஞர்களும் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)