பொது

பி.என் குறித்த முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இல்லாமல், அதன் உச்சமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும்

30/12/2025 04:24 PM

கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) -- பெரிகாத்தான் நேஷ்னல், பி.என் என்ற பெயரின் அடிப்படையில் எடுக்கப்படும் எவ்வித முடிவும் அல்லது நிலைப்பாடும், அக்கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் தனிப்பட்ட முறையில் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்க முடியாது என்பதை அதன் மூன்று இளைஞர் பிரிவுகள் வலியுறுத்தியுள்ளன.

மாறாக, அக்கூட்டணியின் பெயரின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவும், பி.என் உச்சமன்றத்தில் ஆலோசனை செய்து, விவாதிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பெர்சாது, கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, எம்.ஐ.பி.பி-யின் இளைஞர் பிரிவு பிரதிநிதிகள் கூறினர்.

இது, PN அரசியலமைப்பு சட்டம், பிரிவு 13-இன் விதிகளுக்கு உட்பட்டது என்று பெர்சத்து இளைஞர் பிரிவுத் தலைவர், ஹில்மான்ச இட்ஹாம், கெராக்கான் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் லீ பூன் ஷிஹான் மற்றும் எம்.ஐ.பி.பி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் ஜஸ்தின் பிரபாகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

அனைத்து உறுப்பு கட்சிகளும் தத்தம் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையைக் கொண்டிருந்தாலும், பி.என்-னின் நிலைப்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஒப்புதலின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, மக்களின் நலனும் நாட்டின் எதிர்காலத்தையும் கருதி, அனைத்து நிலைகளிலும் உள்ள தலைமைத்துவம், ஞானமும் விவேகமும் உள்ள அரசியலைக் கடைப்பிடித்து, பி.என் கூட்டணியின் மரியாதை மற்றும் ஒழுக்கத்தைப் பேண வேண்டும். என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)