பொது

குற்றமும் நீதிமன்றமும் 

30/12/2025 08:16 PM

கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- நீலாய் பிப்ரவரி 20ஆம் தேதி காலை நீலாயில் உள்ள கம்பள தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அத்தொழிற்சாலை முற்றிலுமாகத் தீக்கிரையானது.

ஜூன் 17ஆம் தேதி, பகாங், குவாந்தான், லேபரில் உள்ள பத்து 8 எனும் இடத்தில் புரோட்டான் வீரா ரக கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கணவன் மனைவி தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்த வேளையில் அவர்களின் மூன்று பிள்ளைகளும் பலத்த காயமுற்றனர்.

கடந்த ஜூன் 24ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளூர் பல்கலைக்கழக மாணவியின் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஜூன் 28ஆம் தேதி இரவு பெர்ஹதியான் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்ததில் 40 வயதான எஸ். ஆறுமுகம், மூன்று வயதான A. சர்விக்கா மற்றும் 10 வயதான V. வெண்பனி ஆகிய மூவர் உயிரிழந்துள்ள வேளையில் ஆறு வயது குழந்தை உட்பட 12 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.

நெகிரி செம்பிலான், சிரம்பான், தாமான் புக்கிட் க்ரிஸ்தலில் உள்ள ஒரு வீட்டில் ஜூலை முதலாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.

கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் துங்குவில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் கொள்ளை மற்றும் வீடு புகுந்து கொள்ளையிடும் கும்பலின் முக்கிய நபராக நம்பப்படும் 36 வயதான ஆடவர் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள பள்ளி ஒன்றில் படிவம் மூன்று பயிலும் மாணவியை ஐந்தாம் படிவத்தைச் சேர்ந்த நான்கு ஆண் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு அலோர் காஜா சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

நவம்பர் 7ஆம் தேதி இரவு கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உள்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனிடையே நவம்பர் 14ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் 14 வயது மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.

சமூக ஊடகப் பிரபலமான தைவான் பெண் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு இயக்குநரும் சர்ச்சைக்குரிய பாடகருமான 42 வயதான நேம்வி என்று அழைக்கப்படும் வீ மெங் சே மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மலாக்கா, டுரியான் துங்காலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் விசாரணை புக்கிட் அமான் மேற்கொண்டு வருகிறது.

ஜி.ஐ.எஸ்.பி.எச் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருட்டின் முஹமட் அலி மற்றும் அக்குழுவின் 12 உயர்மட்ட தலைவர்களுக்கும் நவம்பர் 11ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றம் 15 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்த வேளையில் சட்டவிரோத அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒன்பது பெண் உறுப்பினர்களுக்குத் தலா 4, 500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

மதி இறுக்கக் குறைபாடுடைய ஆறு வயது சிறுவன் சேன் ராயன் அப்துல் மதினின் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை வேண்டுமென்றே புறக்கணித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அச்சிறுவனின் தந்தை சைம் இக்வான் சஹாரியைப் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 4ஆம் தேதி விடுவித்து விடுதலை செய்தது.

மேலும் அச்சிறுவனின் தாயாரான இஸ்மானிரா அப்துல் மனாப்விற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அக்டோபர் 31ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமது வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்த குற்றத்தைக் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியதால் துரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் சோ கியோங்கிற்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வந்தது.

20ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கையூட்டு பெற்றதாக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உள்நாட்டு இணைய செய்தித்தள நிருபர் கடந்த மார்ச் 14ஆம் தேதி மறுத்து விசாரணைக் கோரினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் எட்டு லட்சத்து 59,131 ரிங்கிட் 29 சென் மதிப்புள்ள நம்பிக்கை மோசடி தொடர்பில் பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி மீது மே 14ஆம் தேதி பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு வழிபாட்டுத் தலத்திலிருந்து 50 ஆயிரம் ரிங்கிட் மோசடி செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மலாக்கா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கோயில் சங்கம் ஒன்றின் தலைவரும் செயலாளரும் ஆயர் கேரோஹ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

2015ஆம் ஆண்டில் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்சைக் கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு முன்னாள் நோயியல் நிபுணருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம் ஜூலை முதலாம் தேதி நிலைநிறுத்தியது.

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் UTMமின் பலபேஸ் பயிற்சியாளரான 22 வயதான ஷம்சூல் ஹரிஸ் ஷம்சுதீனை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் உள்ள கல்லறையில் இருந்து சடலத்தை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 28ஆம் தேதி உத்தரவிட்டது. 

சபாக் மாநிலத்தின் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயின்ற 13 வயதான சாரா கைரினா மகாதீர் பள்ளி விடுதி அருகே காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து உண்மை காரணத்தை அறிய மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெற உதவுவதற்காகப் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகினுக்கு 17 கோடியே 68 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட் மூன்று சென் கையூட்டு வழங்கியதாகத் தொழிலதிபர் அல்பர்ட் தேய் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட ஆறாண்டு கால சிறைத்தண்டனையின் எஞ்சிய நாட்களை வீட்டில் இருந்தவாறு அனுபவிப்பதற்கு அவர் செய்திருந்த விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 22ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் 1MDBயின் 230 கோடி ரிங்கிட் நிதி மோசடியை உட்படுத்திய 25 குற்றச்சாட்டுகளில் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் குற்றவாளி என்று டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)