புத்ராஜெயா, 30 டிசம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டிற்கான அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டு விண்ணப்பங்களைப் பெரும் சிறப்பு கால அவகாசத்தை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை திறக்கவுள்ளதாக, உள்துறை அமைச்சு, கே.டி.என் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பிலுள்ள ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான, இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அவ்வமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இச்சிறப்புக் கால அவகாசம், 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதியில், அரசாங்கம் அங்கீகரித்த அனைத்துத் துறைகள் மற்றும் துணைத் துறைகளுக்கான விண்ணப்பங்களை உள்ளடக்கியது.
மேலும், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் மேற்பார்வையின் கீழ் சேவைத் துறைக்கான அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும், இதற்கு முன்னர், முன்கூட்டியே மூடப்பட்ட விண்ணப்பங்கள் உட்பட நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளும் பின்பற்றப்படும்.
இந்தச் சிறப்புக் காலத்தில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிப்பதில், மேற்பார்வையை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதோடு, அந்நியத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் இதர நிபந்தனைகளையும் உட்படுத்தியுள்ளதாக கே.டி.என் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முகவர் அல்லது மூன்றாம தரப்பினர் மூலம் அல்லாமல், KDN-னின், அந்நிய தொழிலாளர்கள் நிர்வகிப்பு ஓரிட மையத்தில், நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனைத்து முதலாளிகளுக்கும் அவ்வமைச்சு நினைவுறுத்தி உள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)