கராகஸ், ஜனவரி 03 (பெர்னாமா) -- வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க இராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
அமெரிக்காவின் விமானப்படை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக வெனிசுலா தெரிவித்திருக்கிறது.
சனிக்கிழமை அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 2 அளவில் குறைந்தது ஏழு வெடிச்சத்தங்களும் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் சத்தங்களும் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, வெனிசுலாவின் பல மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக வெனிசுலா அரசாங்கம் குற்றம் சாட்டியது.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க வணிக விமானங்களுக்கு அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாகப் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் உள்ள கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
வெனிசுலா போதை கடத்தல் மையமாகச் செயல்படுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து தற்போது வெனிசுலா அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)