சிறப்புச் செய்தி

பேராக்கில் மின்னியல் சிகரெட்டுகளுக்கு உரிமம் & புதுப்பிப்பதற்கு அனுமதி இல்லை

05/01/2026 08:08 PM

ஈப்போ, ஜனவரி 05 (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து VAPE எனப்படும் மின்னியல் சிகரெட்டுகளுக்கான விற்பனை உரிமம் மற்றும் அவற்றை புதுப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படாது.

பொது மக்களிடையே குறிப்பாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேராக் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக அம்மாநில சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

''கடந்த ஆண்டு வழங்கப்பட்டதுதான் இறுதி உரிமம். அதற்கான கால அவகாசம் முடியும் வரை அவர்கள் அந்த உரிமையைப் பயன்படுத்தலாம். புதுப்பிற்கு அனுமதி வழங்கப்படாது. கடந்த ஆண்டு அக்டோபரில் மாநில அரசாங்கம் எடுத்த முடிவு இது,'' என்றார் அவர்.

இவ்விவகாரம், கடந்த ஆண்டு செப்டம்பரில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதோடு, இது இவ்வாண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்பதையும் அவர் கடந்த ஆண்டே உறுதி செய்திருந்தார்.

இதன்வழி, வரும் காலங்களில் மாநிலத்தில் மின்னியல் சிகரெட்டுகளுக்கான பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

பேராக், ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனைக்கு புதிதாக நியமனம் செய்யபட்டுள்ள இயக்குனர் டாக்டர் ஃபக்ருதீன் அம்ரானாவை மரியாதை நிமித்தம் சந்தித்தப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் சிவநேசன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)