மலாக்கா, ஜனவரி 06 (பெர்னாமா) -- சட்டவிரோத தொழிலாளர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மலாக்கா மாநில அரசாங்கத்தின் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட நான்கு நபர்களை அம்மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வளாகத்தைப் பாதுகாப்பதற்கு அம்மாநிலத்தைச் சுற்றியுள்ள முதலாளிகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து மாதாந்திர கையூட்டு தொகை பெறுவது சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது மற்றும் அனுமதியின்றி அல்லது செல்லுபடியாகும் பெர்மிட் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவது போன்ற குற்றங்களில் ஈட்டுபட்டதாகக் கூறப்படுகின்றது.
ஊழல் நடவடிக்கையில் தமது கணவருக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் கைது செய்யப்பட்ட அமலாக்க அதிகாரிகளில் ஒருவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.
கையூட்டு தொகை ரொக்கப் பணமாகவும் வங்கி கணக்குகளின் மூலம் செலுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.
இதனிடையே கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இன்று தொடங்கி ஜனவரி 11ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று காலை 11.50 முதல் மாலை 4.50 மணி வரை மலாக்கா மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 17(a)வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)