உலகம்

வெனிசுலாவில் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு

07/01/2026 04:13 PM

கராகஸ் , ஜனவரி 07 (பெர்னாமா) -- அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வெனிசுலா இராணுவ வீரர்களுக்கு, ஏழு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படவிருப்பதாக, அதன் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்திருக்கிறார்.

தென் அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் சுமார் இருபது வெனிசுலா அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வெனிசுலாவில் பணிபுரிந்த தனது 32 இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டிலும் இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களினால் வெனிசுலா மக்களின் அமைதி சீர்குலைந்திருப்பதாக டெல்சி ரோட்ரிகஸ் கூறினார்.

நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநிறுத்துவதற்கு தாம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போதை பொருளை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா அதிபர் Nicolas Maduro மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்க படையினர், அவர்களை புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)