பொது

பெண்ணை ஏமாற்றியதாக போலீஸ் உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

08/01/2026 04:31 PM

பட்டர்வெர்த், 08 ஜனவரி (பெர்னாமா) -- ஈராண்டுகளுக்கு முன்னர் போலீஸ் சம்மனை செலுத்துவதாகக் கூறி, பெண் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டை, கான்ஸ்டபள் பதவிக் கொண்ட போலீஸ் உறுப்பினர் ஒருவர் இன்று பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார்.

53 வயது பெண்ணை ஏமாற்றி, அவரின் தம்பியின் பேரில் இருந்த 850 ரிங்கிட் மதிப்புள்ள அரச மலேசிய போலீஸ் படையின் நான்கு சம்மன்களை, 620 ரிங்கிட் கட்டணத்தில் தீர்த்து வைப்பதாக நம்பிக்கை அளித்து ஏமாற்றியதாக அவாங் அசிசான் அவாங் ஜானா எனும் அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

2024-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி, தென் செபெராங் பிறை, நிபோங் திபாலில் உள்ள வங்கி ஒன்றில் அவர் அக்குற்றச்செயலை புரிந்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் வரையிலான சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 417-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. 

3,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா, வழக்கு முடியும் வரை எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் அந்நபர் கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையையும் பிறப்பித்தார்.  

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]