உலகம்

கிரீன்லாந்தை வாங்கும் பேச்சுவார்த்தையில் டிரம்ப்

08/01/2026 04:34 PM

ஷிங்டன் டி.சி., 08 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலாவை அடுத்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தற்போது கிரீன்லாந்தை குறிவைத்துள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து டிரம்ப்பும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவும் தீவிரமாக விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெரோலைன் லெவெட் தெரிவித்திருக்கிறார்.

''கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது ஒரு புதிய யோசனை அல்ல என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது 1800-ஆம் ஆண்டுகளில் இருந்த அதிபர்கள், இந்நடவடிக்கை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்குச் சாதகமானது என்று கூறினர். ஆர்க்டிக் வட்டாரத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுப்பது அமெரிக்காவின் நலன்களுக்காகவே என்று அவர் உங்களிடமும் உலகத்திடமும் மிகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். அதனால்தான் அவரது குழு தற்போது ஒரு சாத்தியமான கொள்முதல் குறித்துக் கலந்தாலோசித்து வருகிறது,'' என்றார் அவர்.

2019 ஆம் ஆண்டு, முதல் முறையாக அதிபர் பதவியேற்ற டிரம்ப், கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, அமெரிக்க இராணுவத்தின் வியூக நடவடிக்கைகளுக்கு இந்தத் தீவு முக்கியமானது என்று மீண்டும் கூறி வருகிறார்.

இந்நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் டிரம்பின் யோசனைக்கு இராணுவம் உதவியாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதற்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்து, உலகின் மிகப்பெரிய தீவாகும். ஆனால் அங்கே சுமார் 57,000 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)