டிங்கில், ஜனவரி 08 (பெர்னாமா) -- சாலை விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறும் அனைத்து வணிக வாகனங்களுக்கு எதிராக, இவ்வாண்டில் நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு முழுவதும் 12 லட்சம் வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே சோதனையிட்ட நிலையில், இரண்டு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, தரை பொதுப் போக்குவரத்து சட்டம், செக்ஷன் 80-இன் கீழ் 465 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லிதெரிவித்தார்.
"2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 829,392 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. 2025-ஆம் ஆண்டில், 12 லட்சம் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. ஆக, 35.5 விழுக்காடு அதிகரித்துள்ளது,'' என்றார் அவர்.
நேற்றிரவு, வடக்கு நோக்கிச் செல்லும் டிங்கில் R&R ஓய்வு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட அதிக குற்றங்களில் சோதனை அறிவிப்பைப் பின்பற்ற தவறியது, தொழிற்கல்வி உரிமம் இல்லாதது, சக்கரங்களை முறையாகப் பராமரிக்காதது மற்றும் திறமையான ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்காதது ஆகியவை அடங்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)