கோலாலம்பூர், 12 ஜனவரி (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளித் தவணை இன்று தொடங்கி இருக்கும் நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் மாணவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பெற்றோர்கள் சிறந்த வழிகாட்டுதலுடன் துணையாக இருக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் தமது முகநூல் பதிவில் நினைவூட்டினார்.
மேலும், பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவாற்றலும் நற்குணமும் அவர்களை, நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் 2022-ஆம் ஆண்டு தொடங்கி ஏற்பட்ட பள்ளித் தவணை அட்டவணை மாற்றங்களுக்குப் பின்னர், தேசிய பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளுக்கான கல்வி தவணை ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
A குழுவைச் சேர்ந்த கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களில் நேற்று பள்ளித் தவணை தொடங்கிய வேளையில், B குழுயைச் சேர்ந்த ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் கூட்டாட்சி பிரதேசம், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் இன்று பள்ளித் தவணைத் தொடங்கியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]