இங்கிலாந்து, ஜனவரி 12 (பெர்னாமா) -- ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்-டின் இல்லத்திற்கு வெளியே சுமார் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈரானின் கடைசி மன்னன் ஷா-வின் மகனான நாடு கடத்தப்பட்ட ரெசா பஹ்லவி-க்கு ஆதரவு தெரிவித்து ஈரான், இஸ்ரேல், இங்கிலாந்து கொடிகளைப் பறக்கவிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் ஈரான் தூதரகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டவுனிங் தெரு நோக்கி பேரணியாக சென்று ஆதரவு குரல் எழுப்பினர்.
பொதுவாக இஸ்ரேல் ஆதரவு போராட்டங்களை ஏற்பாடு செய்யும் THE STOP THE HATE அமைப்பு இப்பேரணியை ஏற்பாடு செய்து பேச்சாளர்கள் உரையாற்றுவதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றது.
இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட கலவரங்களில் 500-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று நேற்று கூறியது.
மேலும், ஈரானில் ஆட்சி மாற்றத்தை கோரி பல நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் ஜெர்மனி பெர்லினிலும் நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
ஈரானில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை ஆதரிக்க விரும்பும் கட்சி சார்பற்ற மற்றும் சுயாதீன குழுவான எக்கோ பெர்லின் இப்போராட்டத்தை தொடங்கியது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரிலிருந்து ஈரான் இன்னமும் மீளாதாத் நிலையில் அந்நாட்டில் மோசமடைந்து வரும் பொருளாதார சூழல் மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)