பொது

குளிரூட்டியின் இயந்திர அலுத்தி வெடித்ததில் ஒருவர் பலி

12/01/2026 05:25 PM

கோலாலம்பூர், ஜனவரி 12 (பெர்னாமா) -- இன்று காலை குளிரூட்டியின் இயந்திர அலுத்தி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குளிரூட்டி பராமரிப்பு குத்தகையாளர் ஒருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது உயிரிழந்ததை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ்  உறுதிப்படுத்தினார்.

காலை மணி 11.40 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 24 வயதான சூ யூ ஜுவான் உயிரிழந்த வேளையில் அவரின் இரு பணியாளர்கள் மூன்று பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் நான்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

''4-வது மாடியில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு அடுத்துள்ள குளிரூட்டி பராமரிப்பு பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. அச்சம்பவத்தினால், ஒன்பது பேர் பாதிக்கப்பட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். சிலர் சிறிய காயங்களுக்கு ஆளாகினர். அவர்கள் PPUM, HKL மற்றும் சுங்கை பூலோ உள்ளிட்ட அருகிலுள்ள சில மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.'' என்றார் டத்தோ ஃபடில் மர்சுஸ் /

இன்று, புக்கேட் தமன்சாரா ம-வில் உள்ள சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஃபடில் பலியானவர்களில் இருவர் வெளிநாட்டினர் என்றும் மேலும் ஒருவர் வெடித்த பகுதிகள் தாக்கி தீக்காயங்களுக்கு ஆளாகி படுகாயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்த பணியாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக டத்தோ ஃபடில் கூறினார்.

தொடக்க கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பவத்திற்கான காரணம் எரிவாயு வெடிப்பு என்றும் நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)