பொது

மடானி அரசாங்கம் மீதான அவதூறுகளைக் கையாள்வதில் அம்னோ தீவிரம் காட்ட வேண்டும்

14/01/2026 05:53 PM

கோலாலம்பூர், ஜனவரி 14 (பெர்னாமா) -- எதிர்மறை கருத்துகளையும் எதிர் தரப்பினர் ஏற்படுத்தியுள்ள அவதூறுகளையும் எதிர்கொண்டுள்ள மடானி அரசாங்கத்தின் 733 திட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் அம்னோ உறுப்பினர்களும் அதன் தலைமைத்துவமும் இலக்கவியல் களத்தை உடனடியாக திறன்பட கையாள வேண்டும்.

அரசாங்கம் அதன் 38 மாத நிர்வாகத்தில் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வந்தாலும் இவ்வெற்றி குறித்த பகிர்வு இன்னும் குறைவாகவே உள்ளதால் பொறுப்பற்ற தரப்பினர் சமூக ஊடகங்களில் அதிகமான அவதூறுகளைப் பரப்பி வருவதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''மடானி அரசாங்கம் தொடங்கிய 38 மாதங்களில், 733 புதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை அனைத்தும் மக்களுக்கு சேவையை வழங்கின. பத்தாவது பிரதமர் குறித்து யார் நன்முறையில் பேசுகிறார்கள்? மடானி அரசாங்கத்தைப் பற்றி யாருக்கு நேர்மறையான கருத்துக்கள் உள்ளன? உள்ளன. ஆனால் அதிகமில்லை.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி 

இன்று, கோலாலம்பூரில் உள்ள உலக வாணிப மையத்தில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கவியல் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய டாக்டர் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

உலக அரசியல் மிகப்பெரிய மாற்றங்களை கண்டு வரும் நிலையில் சமூக ஊடக பயன்பாட்டில் தேர்ச்சி பெறுவது மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய திறவுகோலாகும் என்று அவர் கூறினார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி நீடித்திருப்பதை உறுதி செய்யும் பொருட்டு எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும்போது பழைய அணுகுமுறைகளை ஒதுக்கி 40 வயதுக்குட்பட்ட தலைமுறையின் சிந்தனைக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் என்று அவர் கட்சி உறுப்பினர்களை அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)