பொது

3 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து புங் மொக்தார் விடுவித்து விடுதலை

16/01/2026 02:26 PM

கோலாலம்பூர், 16 ஜனவரி (பெர்னாமா) --  PUBLIC MUTUAL நிறுவனத்தில் 15 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை உட்படுத்திய 28 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினைக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.

கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி 66 வயதான புங் மொக்தார் காலமானதை அடுத்து, அவர் மீதான வழக்கைத் தொடர தங்கள் தரப்பு விரும்பவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் லோ சின் ஹௌ, இன்று நீதிமன்றத்திடம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் இம்முடிவைச் செய்தார்.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்த நீதிமன்றம், ஜாமின் தொகையான 100,000 ரிங்கிட்டையும் தடுத்து வைத்திருந்த கடப்பிதழையும் உத்தரவாதம் அளித்திருந்த நபரிடம் ஒப்படைத்தது.

எனினும், அக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக புங் மொக்தாரின் மனைவி டத்தின் ஶ்ரீ சிசி இசேத்தே அப்துல் சமாட் மீது சுமத்தப்பட்ட மூன்று வழக்குகள் தொடரப்படும் என்று லோ முன்னதாக தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்கும்படி டத்தின் ஶ்ரீ சிசி இசேத்தே செய்திருந்த பிரதிநித்துவ மனுவைத் தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி நிராகரித்ததை அடுத்து இவ்வழக்கு தொடரப்படுகிறது.

தற்காப்பு வாதம் புரியும்படி 47 சிசி இசேத்தேக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் மார்ச் 5, 6 மற்றும் 12-ஆம் தேதிகளில் வழக்கு விசாரணையை நிர்ணயித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)