ஜாலான் புத்ரா, 16 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டின் 16-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியின் கட்டமைப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பை உட்படுத்திய ஒரு விரிவான மறுசீரமைப்பு செயல்முறையை அமல்படுத்த அம்னோ எண்ணம் கொண்டுள்ளது.
காலத்திற்கு ஏற்ப பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்ய தேசிய முன்னணியின் அரசியல் கூட்டணியின் அமைப்பை மறுஆய்வு செய்வதோடு, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அந்நடவடிக்கையில் அடங்கும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி எடுத்துரைத்தார்.
''தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குப் பொருத்தமான அரசியல் ஒத்துழைப்பு முறையை மறுமதிப்பீடு செய்வதற்கு இது சிறந்த தூண்டுதலாக உள்ளது. இதில் தேசிய முன்னணி அரசியல் கூட்டணியின் வடிவத்தை மறுபரிசீலனை செய்வதும் இத்திட்டத்தில் உட்படுத்தப்படும். தேசிய முன்னணி 50 ஆண்டுகளுக்கும் மேலானது, காலத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்றதாக பார்க்க அதற்கு புத்துயிர் அளிக்க வேண்டும்'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கொள்கை உரையாற்றிய போது டாக்டர் அஹ்மட் சாஹிட் அவ்வாறு கூறினார்.
நாட்டின் அரசியல் சூழல் மாறிவிட்ட நிலையில் தற்போதைய தலைமுறையின் கோரிக்கைகளும் மாறுபட்டு வரும் வேளையில், மறுசீரமைப்பு நடவடிக்கை அவசியமானதாக உள்ளது என்று டாக்டர் அஹ்மட் சாஹிட் வலியுறுத்தினார்.
இதனால், மக்களின் ஆதரவை மீண்டும் பெற தேசிய முன்னணிக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)