பொது

சாரா உதவித் திட்டம் வழி மக்கள் பயன் பெறுகின்றனர்

17/01/2026 03:04 PM

புத்ராஜெயா, 17 ஜனவரி (பெர்னாமா) -- ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி வழங்கப்பட்டு வரும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் வழி, ஜனவரி 13-ஆம் தேதி வரை சுமார் 62 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

சாரா உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மக்கள் வாங்கக்கூடிய பொருள்களின் வகைகள் மற்றும் அதனை விற்பனை செய்யும் கடைகளை அதிகப்படுத்துவது உட்பட பல்வேறு மேம்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதாக கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மாஹ்மூட் மெரிக்கன் கூறினார்.

''இதுவரை, பங்கேற்கும் கடைகளிலிருந்து எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் நேர்மறையானது. சாராவின் உதவித் தொகை அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட்டபோது, ​​அவை அனைத்தும் விற்பனையில் அதிகரிப்பைப் பதிவு செய்தன. பலர் பயன்படுத்தினர், என டத்தோ ஜொஹான் மாஹ்மூட் மெரிக்கன் கூறினார்.

அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் டத்தோ ஜொஹான் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நிதி அமைச்சின் தரவுகள் படி, லாபுவான் மற்றும் சபா மாநிலங்களில் தலா 36 விழுக்காட்டினர் சாரா உதவித் தொகையை பயன்படுத்தியுள்ளனர்.

சாரா மற்றும் ரஹ்மா உதவித் தொகை விநியோகம் மூலம், அதில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் கடைகளுக்கு நன்மைகளையும் வாய்ப்புகளையும் வழங்கியிருப்பதாக ஜொஹான் குறிப்பிட்டார்.

2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் சாரா திட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறிய கடைகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)