பத்துமலை, ஜனவரி 17 (பெர்னாமா) -- தைப்பூசக் காலகட்டத்தில் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் சன்னதியை அடைந்து அவரின் அருளாசியைப் பெற ஆவலோடு காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் ஏக்கத்தை கடந்த 26 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது தமிழன் உதவும் கரங்கள் இயக்கம்.
குகைக்கோயிலில் உள்ள வடிவேலனை தரிசிக்கும் வகையில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியோடு தூக்கிக் கொண்டு மலையேறும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
ஆண்டுதோறும் தைப்பூசத்தின் போது நாட்டில் பிரசித்திப் பெற்ற முருகன் ஆலயங்களில் இச்சேவையை வழங்கி வரும் இந்த இயக்கம் 27-ஆவது ஆண்டாக இம்முறை மீண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் பத்துமலை முருகன் திருத்தலத்தில் அரும்பணி ஆற்றியதை பெர்னாமா செய்திகள் பதிவு செய்திருந்தது.
இன்று காலை தொடங்கியே 90-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் குடும்பத்தார் மூலமாகவும் இன்னும் சில தன்னார்வலர்கள் துணையோடும் அழைத்து வரப்பட்டனர்.
இம்முயற்சியின் தொடக்கம் மற்றும் இவ்வாண்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விளக்குகிறார் மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தின் தலைவரும் தோற்றுநருமான முரளி ஆறுமுகம்.
"என் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு 1999ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி பலரின் முயற்சியால் இதுவரை வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் நூறு மாற்றுத் திறனாளிகளை மலையேற்ற வேண்டும் என்பதே எங்கள் ஆவல். இனி வரும் ஆண்டுகளில் எங்கள் சேவை தொடரும்," என்று முரளி கூறினார்.
தற்போது இளைஞர்கள் அதிகமானார் இந்த இயக்கத்தில் இணைந்து சேவையாற்றி வந்தாலும் இன்னும் அதிகமானோரின் பங்களிப்பு வரவேற்கப்படுவதாகவும் யக்கத்தின் இளைஞர் தலைவர், கதிரவன் காசிநாதன்கூறினார்.
இதனிடையே, தமிழன் உதவும் கரங்கள் இயத்தின் முழு முயற்சியில் இவ்வாண்டும் வேலவனை தரிசிக்கும் தங்களின் கனவு பலித்ததாக கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இரவு மணி ஏழைக் கடந்து வானம் கருக்க தொடங்கி இருந்தும், அந்த இயக்கத்தின் நற்சேவை தொடர்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)