பொது

லாமாக் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட தேசிய முன்னணி

18/01/2026 02:31 PM

கினபாத்தாங்கான், 18 ஜனவரி (பெர்னாமா) -- சபா, லாமாக் சட்டமன்றத் தொகுதியில், ஏழு முதன்மை சலுகைகளைக் கொண்ட “Lamag Wajah Baharu” என்ற கருப்பொருளிலான தேர்தல் வாக்குறுதியை தேசிய முன்னணி வெளியிட்டது.

நேற்றிரவு 'Malam Galau' நிகழ்ச்சியில், லாமாக்  சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் ஆயோப் இந்த தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார்.

B40 மற்றும் M40 பிரிவினருக்கும் மலிவு விலையில் வீடுகளை ஏற்படுத்துவதற்காக, மக்கள் வீடமைப்புத் திட்டம், பிபிஆர் மேம்பாடு உட்பட, சாலைகள், நீர் விநியோகிப்பு, மின்சாரம் மற்றும் இணைய அணுகல் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை அந்த ஏழு சலுகைகளில் அடங்கும்.

லாமாக்கில் சுற்றுலா, கைவினைப்பொருள்கள், தொழில்முனைவோர் மற்றும் கலாச்சாரத் துறைகளின் மேம்பாடு, அத்தொகுதி பிள்ளைகளுக்கு கற்றல் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கினபாத்தாங்கான் திறன் கல்லூரி அல்லது கழகத்தை நிறுவும் திட்டம் ஆகியவையும் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது.

லாமாக்கின் வளர்ச்சியில் முதன்மையாக, பண்டார் ஶ்ரீ மிலியான் என்ற புதிய நகரம் உள்ள நிலையில், உயர்கல்வியைத் தொடர விரும்பும் மற்றும், புதிதாக குடும்பத்தைத் தொடங்கிய இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், கினபாத்தாங்கான் நாடாளுமன்றத்தின் தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் குர்னியாவான் நயிம் மொக்தார் விரைவில் தமது தேர்தல் வாக்குறுதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குள்ள மக்களுக்காக பத்துக்கும் மேற்பட்ட சலுகைகள் அந்த தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்தத் தேர்தல் வாக்குறுதியில் கினபாத்தாங்கனில், கல்வி மற்றும் டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் உட்படுத்தப்படும் என்று முஹமட் குர்னியாவான் நயிம் கூறியுள்ளார்.

''அது முழுமையான இருந்தாலும், அதில் வாழ்கைச் செலவினம் மற்றும் மக்களின் பொருளாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார் அவர்.

சனிக்கிழமை, கினபாத்தாங்கானில், லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் ஆயோப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முஹமட் குர்னியாவான் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)