கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- தனது கூட்டணியில் புதிய உறுப்புக் கட்சியாக மக்கள் முற்போக்குக் கட்சி, பி.பி.பி-ஐ தேசிய முன்னணி அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
சங்கங்களின் பதிவிலாகா, ஆர்.ஓ.எஸ் 2025-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தை பெற்றதன் வழி, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹிமிடி இன்று இந்த அங்கீகாரத்தை அறிவித்தார்.
பி.பி.பி-ஐ தேசிய முன்னணி உறுப்புக் கட்சியாக அங்கீகரிப்பதற்கான செயல்முறைகள் ஜனவரி 21ஆம் தேதி சபா, கோத்தா கினபாலுவில் நடைபெறவிருக்கும் அதன் உச்சமன்றக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படவிருப்பதாக துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
''ஜனவரி 21ஆம் தேதி, கோத்தா கினபாலுவில் நடைபெறும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். மேலும், பிபிபி தலைவர் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவார்,'' என்றார் அவர்.
கோலாலம்பூர் உலக வாணிப மையம், WTCKL-இல் பி.பி.பி கட்சியின் 72-வது பொது மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அஹ்மட் சாஹிட் அவ்வாறு கூறினார்.
72 ஆண்டுகளுக்கு முன்பு, 1953 ஆம் ஆண்டு டி. ஆர். சீனிவாசகம் மற்றும் எஸ். பி. சீனிவாசகம் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட பி.பி.பி கட்சி, 1974-ஆம் ஆண்டு தேசிய முன்னணியில் இணைந்தது.
பின்னர் 2018-ஆம் ஆண்டு தலைமைத்துவ நெருக்கடியைத் தொடர்ந்து, அக்கூட்டணியிலிருந்து பி.பி.பி வெளியேறியது.
இது கட்சியின் பதிவையும் ரத்து செய்ய வழிவகுத்தது.
இந்த அண்மைய அங்கீகாரத்துடன், அம்னோ, ம.இ.கா, ம.சீ.ச மற்றும் சபா மக்கள் ஐக்கிய கட்சி, PBRS ஆகியவற்றிற்குப் பிறகு,
பி.பி.பி தற்போது தேசிய முன்னணியில் ஐந்தாவது உறுப்புக் கட்சியாக இடம் பெற்றுள்ளது.
இதனிடையே, தேசிய முன்னணியின் கூட்டணியில் புதிய உறுப்புக் கட்சியாக பி.பி.பி-ஐ அதிகாரப்பூர்வமாக இணைத்திருப்பது, நெடுநாள்களாக நீடித்த வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் ஜெ. லோக பாலா மோகன் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்கூட்டணியில் இணைந்து மலேசியர்களுக்கு அளப்பரிய சேவையை மேற்கொள்ள தங்கள் தரப்பு காத்திருப்பதாக டத்தோ லோக பாலா கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]