பொது

ஒரே குடும்பத்தில் ஐவர் பலி; சம்பவத்திற்கு முன்னர் வாக்குவாதம் ஏற்பட்டது - சாட்சி வாக்குமூலம்

18/02/2026 05:20 PM

குவாந்தான், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- பகாங், குவாந்தானின் Cherating Damai குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில், நெஞ்சை உலுக்கும் இச்சம்பவத்திற்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டு சத்தம் கேட்டதாக சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் இளைய உடன்பிறப்பான அந்த சாட்சி, காலை மணி ஏழு அளவில் தனது படுக்கையறையில் இருந்தபோது இச்சத்தம் கேட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அசாரி அபு சமா  தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த சாட்சி தமது தாயாரை ரத்தக் காயத்துடன் கண்டதாகவும், அவர், தங்கள் வீட்டுப் பின்புறத்தில் இருந்த உறவினர் ஒருவரிடம் உதவிக் கோருமாறு கூச்சலிட்டதாகவும் ஏசிபி அசாரி விவரித்தார்.

பாதுகாவலராக பணிபுரியும் சந்தேக நபர் உட்பட அவ்வீட்டில் எட்டு குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்த வேளையில், இல்லத்தரசியான அவரின் மனைவி, இரண்டு மகள்கள், அவரின் தாய் மற்றும் மூன்று தம்பிகள் இருந்ததாகவும் ஏசிபி அசாரி கூறினார்.

ஆனால் சம்பவத்தின் போது அறுவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

இதில் சந்தேகத்திற்குரிய அந்த 32 வயதுடைய ஆடவருக்கு இதுவரை மனநோய்க்கான சிகிச்சைப் பதிவுகளோ அல்லது குற்றப் பின்னணிப் பதிவுகளோ இல்லை என்றும் ஏசிபி அசாரி தெளிவுபடுத்தினார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் முதலில் தமது மனைவியான 33 வயதுடைய நூருல் அஷிகின் கமாருசமானைக் காயப்படுத்திய பின்னர் 55 வயதுடைய தாயார் துவான் கமாரியா துவான் புத்தேவையும் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், அவரது இரண்டு மகள்களான முறையே நான்கு மற்றும் இரண்டு வயதுடைய நூர் ஷஃபியா ஹுமாரியா மற்றும் நூர் சுமாயா ஹுமாரியா ஆகியோரையும் காயப்படுத்தியப் பின்னர், தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)