கோலாலம்பூர், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- கோலாலம்பூர், ஜிஞ்சாங் சுற்று வட்டாரப் பகுதியில் 12 பணப்பட்டுவாடா இயந்திரங்கள், ஏ.டி.எம்-இன் திரை உடைக்கப்பட்டதால் மூன்று வங்கி கழகங்கள் அறுபதாயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பை எதிர்நோக்கியுள்ளன.
திங்கட்கிழமை காலை மற்றும் பிற்பகல் தொடங்கி இரவு வரை நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு வங்கி தரப்பிடமிருந்து புகார் கிடைத்ததாக செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி பஸ்ரி சகோனி தெரிவித்தார்.
தங்களின் மூன்று பணப்பட்டுவாடா இயந்திரங்கள் உடைக்கப்பட்டிருப்பதாக ஜிஞ்சாங் செலாத்தான், Maybank வங்கித் தரப்பிடமருந்து முதல் புகார் கிடைத்ததாக பஸ்ரி சகோனி கூறினார்.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது இச்சம்வம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் நான்காயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு, ஜிஞ்சாங் உத்தாராவில், RHB வங்கிக் கிளையின் இரு இயந்திரங்களும் Public Bank வங்கிக் கிளையின் ஏழு இயந்திரங்களும் உடைக்கப்பட்டதாக மேலும் நான்கு புகார்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மொத்த இழப்பு அறுபதாயிரம் ரிங்கிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
போலிஸ் புகார்களைத் தொடர்ந்து, சந்தேக நபரைக் கண்டுபிடிக்க தங்கள் தரப்பு ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இதுவரை இதர குற்றவியல் செயல்கள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 427-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.
இது குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள், அமலாக்கத் தரப்பிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)