பொது

தஞ்சோங் பூலோ கடலில் மூழ்கிய சிறுவனின் உடல் மீட்பு

18/02/2026 05:46 PM

கோத்தா திங்கி, பிப்ரவரி 18 (பெர்னாமா) -- செவ்வாய்க்கிழமை கோத்தா திங்கியில் உள்ள தஞ்சோங் பூலோ கடலில், மூழ்கியதாக நம்பப்படும் 11 வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.

மரணமடைந்த புத்ரா அனிக் ஃபைருஸ் முஹமட் ஃபைசுல் என்ற சிறுவன், சம்பவ இடத்திலிருந்து மிக அருகிலேயே, இரவு மணி 10.26-க்கு கண்டுபிடிக்கப்பட்டதாக தஞ்சோங் செடிலி கடல்சார் மண்டலத்தின் இடைக்கால இயக்குநர் , கடல்சார் தளபதி முஹமட் நஜிப் சேம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கடலில் குளித்து கொண்டிருந்த போது மூன்று சிறுவர்கள் காணாமல் போனதாக பிற்பகல் மணி 1.30-க்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் நஜிப் சேம்  கூறியிருந்தார்.

அதில் இரு சிறுவர்கள் உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் துணையுடன் சம்பவ இடத்திற்கு அருகிலேயே மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுவனைத் தேடும் பணி நேற்றிரவு அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படும் வரை நீடித்தது.

இத்தேடல் பணியில் போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் சுகாதார அமைச்சைச் சேர்ந்தவர்களும் உட்படுத்தப்பட்டிருந்ததாக முஹமட் நஜிப் சேம்  தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)