பகாங், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- ரவுப்பில் உள்ள கம்போங் பாமா கூலாட் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
அதில் மூவரிடன் சடலங்கள் குளியல் அறையிலும், இருவரின் உடல்கள் வீட்டிற்கு வெளியேயும் கண்டெடுக்கப்பட்டன.
குளியலறையில் மீட்கப்பட்ட சடலங்களில் ஓர் ஆண், பெண் மற்றும் அவர்களின் மகள் என்று நம்பப்படும் ஒரு சிறுமியின் உடல் இருந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-இன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்தார்.
இரண்டு அறைகள் கொண்ட வீட்டிற்கு வெளியே காணப்பட்ட மற்ற இரு சிறுமிகள் சம்பவத்தின் போது தப்பிக்க முயன்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.
''அதிகாலை மணி 4.15-க்கு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்திருந்த வேளையில், சம்பந்தப்பட்ட இரு பிள்ளைகளும் வீட்டிற்கு வெளியே எரிந்து கிடக்க காணப்பட்டனர். அதிகாலை மணி 5.24-க்கு தீ முற்றாக அணைக்கப்பட்டதும் மூன்றாவது உயிரிழந்த மற்றொரு சிறுமியும் காணப்பட்டாள்,'' என்றார் அவர்.
தீ வேகமாக எரிந்ததை உணர்திருந்த அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறுவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கலாம் என்றும் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை அடையாளம் காண்பது உட்பட மேலும் விசாரணைக்காக மோப்ப நாய்களின் சேவைகளும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, தகவல் அறிந்ததும் அதிகாலை மணி 4.15 அளவில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்ததோடு, 4.48 அளவில் தீயை முற்றாகக் கட்டுப்படுத்தியதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், மூன்று கார்களும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீயில் முழுமையாக சேதமுற்றன.
இதனிடையே, 56 வயது முஹமட் அலாவி முஹமட், 44 வயதுடைய அவரின் மனைவி சலேஹா அடாம் அவர்களின் மூன்று பெண் பிள்ளைகளான 17 வயது ரூபி பட்ரிஷா 14 வயது ரூபி அட்லினா பானின் மற்றும் 10 வயது ரூபி அஸ்யான் பாரிசா ஆகிய ஐவரே, இச்சம்பவத்தில் பலியாகிவர்கள் என்று ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அக்குடும்பத்தின் மற்ற இரு பிள்ளைகள் ஒரு விடுதியில் தங்கியிருப்பதால், சம்பவத்தின் போது அவர்கள் வீட்டில் இல்லை என்றும் முஹமட் ஷாரில் கூறினார்.
19 வயதுடைய ரூபி அடாலியா பல்கிஸ் என்பவர் குவாந்தான், கம்பாங்கில் உள்ள மெட்ரிகுலேஷன் கல்லூரியில் படித்து வரும் வேளையில், மற்றொருவரான 15 வயது அஹ்மாட் பலியா முர்காம் என்பவர், டோங் இடைநிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்.
தீ விபத்தில் வீடு முற்றாக சேதமுற்றது விசாரணையில் கண்டறியப்பட்ட வேளையில், இழப்பின் மதிப்பு குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)