பொது

நாட்டின் அமைதியைத் தொடர்ந்து பாதுகாக்க மக்களுக்கு வலியுறுத்து

26/02/2026 04:36 PM

சிலாங்கூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- இன உணர்வுகளைத் தூண்டிவிட விரும்பும் ஒரு சில தரப்பினரின் சினமூட்டும் செயல்களால் கவரப்படாமல், நாட்டின் அமைதியைத் தொடர்ந்து பாதுகாக்க மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

சில நலன்களுக்காக அரசாங்க அறிக்கைகளை அடிக்கடி திரித்து வெளியிடும் தரப்பினர் இருப்பதாகவும், இதனால் சமூகத்தின் நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசியர்களில் பெரும்பாலானோர் அமைதிக்கான விருப்பத்தை ஆதரிப்பதாகவும், இனம் தொடர்பான எந்தவொரு தடைகளும் இல்லாமல் நாடு பொருளாதார ரீதியாக தொடர்ந்து முன்னேறுவதைக் காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.

''இந்தக் காலத்தில் கோபமாக இருப்பவர்கள், இந்தச் சிறியக் குழு. பெரும்பான்மையான மக்கள் இந்த நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதன் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்,'' என்று அன்வார் குறிப்பிட்டார்.

இன்று, வியாழக்கிழமை சிலாங்கூர், ஸ்ரீ கெம்பங்கானில் நடைபெற்ற 2026 ஹுவாசோங் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அமைதியையும் ஒருமைப்பாட்டையும் விரும்பும் பெரும்பாலானோரின் கருத்துக்கள் தொடர்ந்து செவிமடுக்கப்படுவதையும், ஒவ்வொரு கொள்கை மற்றும் செயலிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று அன்வார் கூறினார்.

இதனிடையே, மலேசியர்களிடையே சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதன் அடிப்படையாக, ஒவ்வோர் இனத்தின் பங்களிப்புகளின் வரலாற்றை ஆராய இளைய தலைமுறையினர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதல், இந்நாட்டில் இனங்களுக்கிடையில் தவறான கண்ணோட்டத்தை நீக்கி, பரஸ்பர மரியாதையை வளர்க்கும் என்று அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)