மலாக்கா, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று, மலாக்கா தெங்கா, ஜாலான் தெம்பாக் பாயாவில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி, மற்றொருவர் படுகாயம்.
இடைநிலைப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்கள் தரப்பிற்கு அதிகாலை மணி 3.50 அளவில் தகவல் கிடைத்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி கிறிஸ்ட்டஃபர் பதிட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், ஒரு யமாஹா Y16 மற்றும் இரண்டு யமாஹா 15ZR ரக மூன்று மோட்டார் சைக்கிள்கள், சம்பந்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக கிறிஸ்ட்டஃபர் கூறினார்.
அவர்களில் இருவர் புக்கிட் கட்டிலிலிருந்து தியாங் டுவா நோக்கிச் சென்றதாகவும், மற்றொன்று எதிர் திசையிலிருந்து வந்ததாகவும் நம்பப்படுகிறது.
15 வயதான முஹமட் அடிஃப் ஃபரிஹின் முஹமட் அனுவார், 16 வயதான முஹமட் அஸ்மி அப்துல் ரஹிமா மற்றும் நூர் கைரியா மாட் மஸ்லின் ஆகியோர் தலை, முகம் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
18 வயதான முஹமட் ஹசிக் ஹைக்கால் கசிம் தலை, கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது மலாக்கா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]