பொது

அதிகமான விவேக பலகைகள்: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ரந்தாவ் தமிழ்ப்பள்ளி

02/03/2026 06:57 PM

சிரம்பான், 02 மார்ச் (பெர்னாமா) -- மலேசியாவில், மிக அதிக எண்ணிக்கையிலான விவேக பலகைகளைப் பெற்ற முதல் தமிழ்ப்பள்ளியாக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நெகிரி செம்பிலானில் அமைந்துள்ள ரந்தாவ் தமிழ்ப்பள்ளி. 

இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதியாக மட்டுமல்லாமல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய ஒன்றாகவும் இந்த விவேக பலகைகள் அமைவதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியை மகேஸ்வரி கேசவன் தெரிவித்தார்.

சுமார் 300 மாணவர்களைக் கொண்டுள்ள ரந்தாவ் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி உட்பட அனைத்து வகுப்புகளிலும் 14 விவேக பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளதாக மகேஸ்வரி கேசவன் கூறினார். 

கல்வி அமைச்சின் இலக்கிற்கு ஏற்ப இலக்கவியலின் மூலம் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் Linsun Engineering நிறுவனம் அளித்த இவ்வுதவி அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

அதுமட்டுமின்றி, இலக்கவியல் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் அப்பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்று கூறிய மகேஸ்வரி, கற்றல் கற்பித்தல் செயல்முறை துரிதமாகவும் விவேகமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யக்கூடியவர்கள் என்றும் அவர் பாராட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]