அரச விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது

03/03/2026 03:42 PM

கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அமலாக்க அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஓர் அரச விசாரணை ஆணையம், ஆர்.சி.ஐ-யை அமைக்கும் பரிந்துரை குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது.

இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையவிருக்கும் தேசிய சட்டத்துறை தலைவரின் முழு அறிக்கையை பரிசீலித்த பின்னரே, இவ்விவகார குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''அரச விசாரணை ஆணையத்தின் பரிந்துரையைப் பொறுத்தவரை, எங்களுக்கு இது சற்று முன்னதாகவே மிக விரைவாக எடுக்கப்பட்டது. ஏனெனில் முதலில், சட்டத்துறைத் தலைவர் தலைமையிலான விசாரணை இந்த வாரம் சில நாட்களில் நிறைவடையும். எனவே, அந்த முடிவுகளை முதலில் பார்த்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நியாயமும் தேவையும் உள்ளதா, தொடர்வதற்கான காரணம் என்ன, எந்தெந்த பகுதிகளில் விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்,'' என்றார் அவர். 

நிறுவன மோசடி கும்பல்களைப் பாதுகாக்க அமலாக்க அதிகாரிகளின் ஈடுபாடு இருப்பதாகக் கூறும் Bloomberg ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

அந்த அனைத்துலக ஊடக அறிக்கை குறித்து மேலும் கருத்து தெரிவித்த அன்வார், நடைபெற்று வரும் விசாரணையில் எந்த ஒரு தனிப்பட்ட ஊடக ஆதாரத்திற்கும் அரசாங்கம் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் வழங்க விரும்பவில்லை என்றும் வலியுறுத்தினார்.

இருப்பினும், எழுப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையும் உறுதியான அடிப்படையைக் கொண்டிருந்தால் மேலும் விசாரிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]