கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தாலும் ரோன்95-இன் விலை நிலைநிறுத்தப்படும்

03/03/2026 04:24 PM

கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் அறிகுறியை காட்டினாலும், அரசாங்கம் ரோன்95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக தொடர்ந்து நிலைநிறுத்தும்.

உலக சந்தையின் எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், ரோன்95  பெட்ரோலின் உள்நாட்டு விலை பாதிக்கப்படாது என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உறுதிமொழிக்கு ஏற்ப, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசி இந்த உத்ரவாதத்தை வழங்கியுள்ளார்.

''ஆமாம், பிரதமரின் உறுதிப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சந்தை விலை தற்போது மாறி வருகிறது என்பதுதான் காரணம். எனவே எங்கள் அமைச்சின் வழி, என்ன நிகழ்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஆனால் நமது கொள்கை அடிப்படையில் எந்தவொரு கடுமையான மாற்றங்களையும் அரசாங்கம் செய்ய எந்த அறிகுறியையும் அது கொடுக்கவில்லை. நமது அண்டை நாட்டிற்கு என்ன நிகழ்கிறது என்பது உட்பட. எங்களைப் பொறுத்தவரை தற்போது உள்ளதை  நாங்கள் பராமரிக்கிறோம்,'' என்றார் அவர். 

எந்தவொரு மோதலும் ஏற்படும்போது, ​​அது வழக்கமாக விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளைவிக்கும் என்றும் அவர் விளக்கினார்.

இருப்பினும், தற்போதுள்ள கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை என்பதை அக்மால் நஸ்ருல்லா சுட்டிக்காட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]