கோலாலம்பூர், மார்ச் 05 (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் அமலாக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவராக தன்னை சித்தரிக்க முயற்சிக்கும், ரஃபிசி ரம்லியின் முன்னாள் உதவியாளரான ஜேம்ஸ் சாய் என்றியப்படும் சாய் ஜின் ஷெர்ன் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.
சம்பந்தப்பட்ட அந்நபரின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதோடு, அவை குழப்பத்தை ஏற்படுத்தி, அவ்வாணையத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணை நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்தது.
ஜேம்ஸ் சாயை மட்டுமே குறிவைத்து எஸ்.பி.ஆர்.எம்-இன் செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற அவரின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதோடு அது ஆதாரமற்றது என்றும் அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் சாய் குறிப்பிட்டுள்ள அச்சந்திப்பு, எஸ்.பி.ஆர்.எம்-இன் மாதாந்திர செய்தியாளர்கள் சந்திப்பாகும்.
அவ்வாணையம் மேற்கொண்டு வரும் பல வழக்கு விசாரணைகளின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது நடத்தப்படுபவை என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்காக, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறியும் அறிவிப்பு குற்றவியல் குற்றச்சாட்டு அல்ல என்றும், அதில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் குற்றம் செய்துள்ளனர் என்ற முடிவுக்கு அது வழிவகுக்காது என்றும் எஸ்.பி.ஆர்.எம் வலியுறுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)