ஜார்ஜ்டவுன், மார்ச் 05 (பெர்னாமா) -- கடந்த வாரம், பாரங் கத்தியைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, நான்கு ஆடவர்கள் இன்று ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
நீதிபதி இர்வான் சுயைன்போன் முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், ஜி.கிஷன், எஸ்.யோகயோகன், ஹெகணேஸ்வரன் சண்முகநாதன் மற்றும் சர்வீந்திரன் கிருஷ்ண குமார் ஆகியோர் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.
கூட்டாக இணைந்து, சட்டத்திற்கு புறம்பாக, பாரங் கத்தியைப் பயன்படுத்தி
S. Prashanraj என்பருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக நான்கு ஆடவர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.
பிப்ரவரி 25-ஆம் தேதி, காலை மணி 8 அளவில், பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள கெர்னி பெரகோன் பேரங்காடியில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 120B-இன் கீழ் அவர்கள் மீதான குற்றம் விசாரிக்கப்படுகின்றது.
நான்கு ஆடவர்களுக்கும் தலா 15,000 ரிங்கிட் ஜாமீன் தொகை வழங்கி தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுவதுடன், விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களைச் சமர்ப்பிக்க இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)