ஜார்ஜ்டவுன், 05 மார்ச் (பெர்னாமா) -- உடல் தோற்றத்திற்கு மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும் பங்கம் விளைவிக்கிறது, நாளுக்கு நாள் அதிகரிக்கும், குறிப்பாக சிறார்கள் மத்தியில் உயர்ந்து வரும் உடல் பருமன் பிரச்சனை.
உலகளவில் தற்போது ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று கோடியே 80 லட்சம் சிறார்கள், இந்த உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகி இருப்பது உலக சுகாதார நிறுவனம், WHO-வின் தரவுகளின் வழி தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆசிய நாடுகளில் இரண்டாம் நிலையில் உள்ள மலேசியாவில், சுமார் 15 விழுக்காட்டு சிறார்கள் உடல் பருமன் பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பது பெரும் கவலையளிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.
அதிகமாக சாப்பிடும் மற்றும் குறைவாக உடற்பயிற்சி செய்யும் பிள்ளைகளின் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், குளிர் பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
இப்பிரச்சனையைக் களைவதற்கு அவசர நடவடிக்கை தேவை என்று கூறிய அச்சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ், இதற்கு பெற்றோரின் பங்கு அளப்பரியதாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
சிறார்கள் மத்தியில் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை, குறிப்பாக சமசீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுமாறு அவர் மலேசியர்களை கேட்டுக்கொண்டார்.
''உணவு கலாச்சாரம் மிக முக்கியம். மரபியல் வழியும் சிலர் அதிக எடை கொண்டுள்ளனர். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் உணவு பழக்கவழக்கமே ஒருவருக்கான அதிக எடைக்கு வித்திடுகிறது. திடீர், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மிகவும் ஆபத்தானவை. அந்த உணவு வகைகளை அதிகம் உண்ணக்கூடாது. இதனால் கொழுப்பு அதிகமாக இருக்கின்றது,'' என்றார் அவர்.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க அவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்கலாம் என்று கூறிய அவர், பிள்ளைகளுக்கு போதுமான தூக்கமும் அவசியம் என்றார்.
அதுமட்டுமின்றி, அதிகமான தொலை தொடர்பு சாதனங்களின் பயன்பாடும் சிறார்களின் உடல் பருமன் பிரச்சனைக்கு வித்திடுவதாக சுப்பாராவ் கூறினார்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்பதால் அதிகச் சோர்வையும் அவர்கள் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
உடல் பருமனைக் கட்டுப்படுத்த 800 கோடி காரணங்கள் எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டு அனுசரிக்கப்படும் உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு சுப்பாராவ் பெர்னாமா செய்திகளிடம் அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]