கோலாலம்பூர், மார்ச் 06 (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டில் 38-ஆயிரத்து 440 கோடி ரிங்கிட்டாக பதிவான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள், கடந்தாண்டு 11 விழுக்காடு அதிகரித்து, 42-ஆயிரத்து 670 கோடி ரிங்கிட்டாக பதிவான நிலையில், இது நாட்டின் வரலாற்றியே மிக அதிகமான முதலீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலேசியர்களுக்கு 200,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட 8,390 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
உள்நாட்டு முதலீடு 21,960 கோடி ரிங்கிட்டாக வலுபெற்ற நிலையில், இது நாட்டின் மொத்த முதலீட்டில் 51.5 விழுக்காடு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, மலேசியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை, கொள்கைகள் மற்றும் தடத்தின் மீதான உள்நாட்டு மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை, 20.9 விழுக்காடு உயர்ந்து 20,710 கோடி ரிங்கிட்டாக பதிவான வெளிநாட்டு முதலீடுகள் பிரதிபலிப்பதாக பிரதமர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)