கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் தங்களின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
அதோடு, அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் மலேசியாவும் பாகிஸ்தானும் வலியுறுத்துகின்றன.
இஸ்ரேலின் யூத ஆட்சி மற்றும் அமெரிக்கா-ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைமை குறித்து இரு தலைவர்களும் தொலைப்பேசி வாயிலாக உரையாடியபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் இணைந்து அதற்கு இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இத்தாக்குதல் நடவடிக்கை அனைத்துலக சட்டத்தின் கொள்கைகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் மீறுவதாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றங்கள் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும், இரு நாடுகளும் அமைதியை முன்னெடுத்து செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஷெபாஸ் தம்மிடம் பகிர்ந்து கொண்டதாக அன்வார் கூறினார்.
மேலும், பேச்சுவார்த்தை மற்றும் அரசதந்திர வழிகள் மூலம் இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)