கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- இஸ்லாம் மதம் போதிக்கும் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
உண்ணாமல், பருகாமல், இன்பம் துய்க்காமல் இருப்பது மட்டுமல்லாமல் மனிதருக்குள் இறைத்தன்மையைக் கொண்டு வந்து வாழ்க்கையைக் கட்டுப்பாடோடு வாழ்வதற்கு நோன்பு வழிவகுப்பதாக இஸ்லாமிய பேச்சாளரும் எழுத்தாளருமான உஸ்தாத் கம்பம் பீர் முகமது கூறுகின்றார்.
எனவே, நோன்பின் மாண்புகளையும் அது தரும் மகத்துவங்களையும் புரிந்து கொண்டு நோன்பிருப்பவர்கள் இக்கடமையை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
அன்னத்தை அடக்கியவர் ஐம்புலன்களையும் அடக்குவார் என்று பொது மொழி ஒன்று கூறுகின்றது.
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும்போது மனம் ஞானத்தைத் தேடிச் செல்வதாகவும், ஆசை, தேவை, உணவு மற்றும் பானங்கள் இருந்தும் அவற்றை உண்ணாமல், பருகாமல் இருக்கும்போது பசியின் அருமையை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த நோன்பு சுயக்கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு, ஒரு நோன்பாளியின் உள்ளத்தையும் உடலையும் பக்குவமாக வாழ பயிற்சியளித்து, அவருக்குள் இறைத்தன்மையைக் கொண்டு வருவதாக உஸ்தாத் கம்பம் பீர் முகமது தெரிவித்தார்.
இந்த நோன்பு காலக் கட்டத்தில் ஒரு நோன்பாளி எண்ணத்தாலும் செயலாலும் பிறருக்கு தீங்கு நினைக்காமலும் துன்பம் விளைவிக்காமலும், பத்தியம் காப்பது போல இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொய் சொல்லுதல், மற்றவர்களைப் புறம் கூறுதல், தகாதச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது என வலியுறுத்திய உஸ்தாத், இஸ்லாமியர்கள் நோன்பின் மகிமையை தெரிந்துக் கொண்டு பிறருக்கும் அதனை உணர்த்த வேண்டும் என கூறினார்.
உலக நாடுகளில் போர் மூண்டிருக்கும் இடங்களில் இஸ்லாமிய மக்கள் நோன்பு நோற்க முடியாமல், இறைக் கடமையை நிறைவேற்ற முடியாமல் போவது குறித்தும் உஸ்தாத் கருத்து தெரிவித்தார்.
சுமார் 14 மணி நேரங்கள் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தம்மை தூய்மைப்படுத்தி கொள்ளவதை நோன்பு போதிக்கின்றது.
நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என்று குறிப்பிட்டு கூற முடியாது என்று கூறிய அவர், நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி இறைவன் அதன் கூலியை வழங்குவதாக பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)