புத்ரா ஜெயா, மார்ச் 06 - சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.
இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள சிக்கல்கள் தொடர்பான ஒற்றுமை மற்றும் நிர்வாகத் திட்டமிடல் கூட்டம் நடந்தது. மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் மற்றும் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி ஆகியோர் இணைந்து இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இரு துணை அமைச்சர்களின் கூட்டு அறிக்கையின்படி, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கிய நிர்வாகத்தின் அம்சங்களை இணைந்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இக்கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மேலாண்மை, ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்கு ஏற்ப எழும் சிக்கல்களைக் கையாள்வதில் சிறந்த அணுகுமுறை ஆகியவற்றின் அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.
கூடுதலாக, வழிபாட்டுத் தலங்களின் மேலாண்மை, கட்டுமான நடைமுறைகள், வழிகாட்டுதல்கள் தொடர்பான புரிதலை வலுப்படுத்துவதன் அவசியமும் இக்கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சகம் (KPKT) முக்கிய பங்கு வகிக்கிறது.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதி ஒருங்கிணைப்பு பிரிவு (RIBI) மூலம் தொடர்புடைய நிதி வழங்கப்படுவதைக் கண்காணித்து (KPKT) ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, அனைத்துத் தரப்பினரும் (KPKT) வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
(KPKT) அதிகார வரம்பிற்குள் மூன்று முக்கிய சட்டங்கள் உள்ளன. ஊராட்சித் துறை சட்டம் 1976 (சட்டம் 171), சாலை, கால்வாய் மற்றும் கட்டடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) , நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1976 (சட்டம் 172) ஆகிய மூன்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழிபாட்டு தலங்களின் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகின்றன.
அதே நேரத்தில், எந்தவொரு சிக்கல்களையும் ஆலோசனை அடிப்படையில் அணுகுமுறை, பரஸ்பர புரிதல் மற்றும் ஒற்றுமை உணர்வு மூலம் தீர்க்க முடியும் என்பதை உறுதிசெய்ய, மத சமூகங்களின் உறுப்பினர்களுடன் உரையாடலுக்கான தளத்தை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்கும் .
மதம், இனம் மற்றும் ஆட்சியாளர் (3R) தொடர்பான சிக்கல்களில் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் அரசு சமரசம் செய்யாது. அதோடு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரசு வலியுறுத்துகிறது.
இக்கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்து, கிறிஸ்துவர், புத்தம் , தாவோ, சிக் மற்றும் பஹாய் சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றனர்.
மேலும் உள்துறை அமைச்சு (KDN), வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு (KPKT), அரச மலேசிய போலீஸ் அதிகாரிகள் (PDRM), இஸ்லாமிய மேம்பாட்டு துறை (JAKIM), மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (SKMM), சங்கங்களின் பதிவு இலாகா (ROS), PLANMalaysia உள்ளிட்ட பல அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)