பொது

மாநில அரசாங்கங்களின் கீழ் இந்து அறப்பணி வாரியம்; மலேசிய இந்து சங்கம் ஆதரவு

07/03/2026 04:10 PM

கோலாலம்பூர், மார்ச் 07 - ஆலயக் கட்டுமானம், நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களின் உரிமை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுடன் இந்து அறப்பணி வாரியங்களின் நிர்வாகம் அணுக்கமாக இருக்கும் பட்சத்தில், அந்தந்த மாநில அரசுகளால் அவை மேற்கொள்ளப்படும் என்ற கூற்றை மலேசிய இந்து சங்கமும் ஆதரித்துள்ளது.

இருப்பினும், மாநிலந்தோறும் இருக்கின்ற இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் குறிப்பிட்ட சில ஆலயங்கள் மட்டுமே பதிவாகி இருப்பதாக இந்து சங்கம் அறியவருகிறது என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் கணேசன் தங்கவேலு தெரிவித்தார்.

எனவே, இவ்விவகாரத்தை தீர ஆராய்ந்து பதிவு பெற்ற ஆலயங்களை அந்த வாரியத்தின் கீழ் இணைக்கும் முயற்சியில் அதன் நிர்வாகத்தினர் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாரியத்தை அமைக்கும் சட்டம் கூட்டரசு அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனை நிறுவும் அதிகாரம் மாநில அரசாங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதால், அதன் நிர்வாகம் சட்டபூர்வமாகவும் ஒழுங்குமுறையோடும் செயல்படுவதற்கு மாநில அரசாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கணேசன் தங்கவேலு நினைவுறுத்தினார்.

"ஆனாலும் இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் ஆலயங்கள் செயல்படும் போது அது முழுமையான சுதந்திரத்துடன் செயல்படுகிறதா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அந்தந்த ஆலயங்களும் அதன் நிலைமைக்கு ஏற்ப சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அறப்பணி வாரியம் என்கிறதுபோது அங்குள்ள அதிகாரிகளால் சில தளர்வு கட்டுப்பாடாக மாற்றப்படும் என்பதையும் நான் உணர வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் ஆலயங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் அதன் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுமா என்பதை ஆலயத் தரப்பு முறையாக சிந்தித்து விவேகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் கீழ் ஆலயங்கள் நிர்வகிக்கப்படும் வேளையில், சில கட்டுப்பாட்டுகள் கடுமையாக்கப்படும் என்பதால், அதற்கு உட்பட்டு ஆலயங்கள் செயல்பட நேரிடும் என்றும் கணேசன் தங்கவேலு குறிப்பிட்டார்.

எனவே, மாநில அளவில் இத்தகைய பொறுப்பில் நியமிக்கப்படுவர்கள், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக் கூடிய தன்மையும், ஆற்றலும் மிக்கவராக இருக்க வேண்டும் என்ற தமது ஆவலையும் கணேசன் தங்கவேலு வெளிப்படுத்தினார்.

பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்து அறப்பணி வாரியம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவ்வாறு பதிலளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)