பொது

DAESH வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணை நிறைவு செய்ய கால அவகாசம் தேவை

07/03/2026 04:35 PM

கூலிம், மார்ச் 07 - DAESH பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், அண்மையில் கைது செய்யப்பட்ட பதின்ம வயதினர் உட்பட அறுவரின் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், SOSMA-வின் கீழ் நடைமுறைகள் செயல்படுத்தக்கூடாது என்று சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும் பயங்கரவாதம் அடிப்படையில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர்  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

“நிச்சயமாக, போலீசாரின் நடவடிக்கை சில விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மனித உரிமை போராளிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் என்று கூறுகின்றனர். எனவே, கைது செய்யப்பட்டவர்கள் மீது சொஸ்மா சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். வட்டார நடமாட்டத்தை உள்ளடக்கியிருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அடிப்படையில், குறிப்பாக வன்முறை அணுகுமுறையைப் பயன்படுத்துபவர்கள் மீதான விசாரணையை முடிக்க போலீசாருக்கு நீண்ட கால அவகாசம் தேவை என்பது உண்மைதான்,” என்றார் அவர்.

நேற்று, கெடா, கூலிமில் மாநில அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட சம்பவம் அண்டை நாடுகளை உட்படுத்தி இருந்தால், போலீசார் அந்நாட்டிலுள்ள அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்தவும் விவரங்களைப் பெறவும் வேண்டும் என்று அவர் விவரித்தார்.

எனவே, சந்தேக நபருக்கு 17 அல்லது 18 வயதாக இருந்தாலும், இச்செயல்முறையை இரண்டு அல்லது மூன்று நாட்களில் செய்துவிட முடியாது என்பதையும் சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)