கோலாலம்பூர், மார்ச் 07 - அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இறையாண்மை, உள்கட்டமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள கட்டார் மற்றும் பஹ்ரெய்னுக்கு மலேசியா தனது அனுதாபத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை கட்டார் பிரதமர் ஷேக் முஹமட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடனும் அதன் பின்னர் பஹ்ரெய்னின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான புத்ர சல்மான் பின் ஹமாட் அல் கலிஃபாவுடனும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலில் இவ்விவகாரம் குறித்து பேசப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மோதலைத் தொடர்ந்து கட்டார், பஹ்ரெய்ன் மற்றும் மத்திய கிழக்கில் தற்போதைய நிலைமைகள் குறித்த கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளிலும் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் கட்டார் மற்றும் பஹ்ரெய்ன் அரசாங்கங்களின் முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அனைத்து தரப்பினரும் அமைதியான அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிப்பதோடு வட்டார அளவிலான நிலைத்தன்மை மற்றும் அமைதியைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதுவதாக அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)