ஊக்கமளிக்கும் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டிலும் தொடரும்

13/03/2026 06:21 PM

புத்ராஜெயா, மார்ச் 13 (பெர்னாமா) -- உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்களை நாடு எதிர்கொண்ட போதிலும், 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஊக்கமளிக்கும் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இலக்கை விட 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதைக் காட்டுவதாகவும், இவ்வாண்டு தொடர் வளர்ச்சிகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

தற்போதுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள், உள்நாட்டு முதலீடு மற்றும் உள்நாட்டு செலவினங்களால், 2025-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3 விழுக்காடாக பதிவு செய்யப்பட்ட வேளையில், அதே ஆண்டு முழுவதும் 5.2 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டது.

'''இங்குள்ள (மலேசியா) பொருளாதாரம் இன்னும் வலுவாக இருந்தால், மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது நிலைத்தன்மையைப் பொறுத்தவரை மலேசியாவுக்கு அது (பொருளாதாரம்) சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. எனவே எங்கள் முயற்சிகள் எண்ணெய் பிரச்சனையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், இருக்கும் வாய்ப்புகளையும், தற்போதுள்ள பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை அதிகரிக்கக்கூடிய வழிகளையும் அணுகுவதாகவும்,'' என்றார் அவர்.

இந்த ஆண்டு முழுவதும் நிலைமையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள, நாடு இவ்வாண்டின் நிலையான மற்றும் வலுவான நிலையை பயன்படுத்தி கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று, புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமிர் ஹம்சா அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)