பொது

ஜோகூர் நிர்வாகத்தில் மாமன்னர் & துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் ஆலோசனை; தமக்கு வழிகாட்டி

14/03/2026 06:57 PM

ஜோகூர் பாரு, 14 மார்ச் (பெர்னாமா) -- கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில நிர்வாகத்தை வழிநடத்துவதில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூரின் தற்காலிக சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸிக்கு எப்போதும் முக்கிய வழிகாட்டியாக இருந்து வருகிறது.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமிக்கப்பட்டதிலிருந்து, மாநில நிர்வாகத் தலைவராக தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சுல்தான் இப்ராஹிம் மற்றும் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின்  வழிகாட்டுதல் மற்றும் அனுபவங்கள் "திசைகாட்டியாக" இருப்பதாக 47 வயதான ஓன் ஹஃபிஸ் கூறினார்.

"டத்தோ, நீங்கள் ஒரு தலைவராகும்போது, ​​உங்களைப் புல்லை விட சற்று தாழ்வாக வைத்துக் கொள்ளுங்கள். ஆணவம் கொள்ளாதீர்கள். கர்வம் கொள்ளாதீர்கள். மக்களுக்குச் சேவை செய்கிறீர்கள் என்பதற்காக ஆணவம் கொள்ளாதீர்கள். எனவே அந்த நடத்தை மிகவும் முக்கியமானது," என்ற மாமன்னரின் அறிவுரையை அவர் நினைவு கூர்ந்தார்.

மாமன்னரின் அந்த அறிவுரை எப்போதும் தமது நினைவில் பதிந்துள்ளதாகவும், மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் பணிவாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கான நிலையான நினைவூட்டலாகவும் அந்த வார்த்தைகள் செயல்பட்டதாகவும் ஓன் ஹஃபிஸ் விவரித்தார்.

அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
 
இதனிடையே, ஜோகூர் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும், ஜோகூர் மக்களின் அடையாளத்தை மறந்துவிடக் கூடாது என்று ஜோகூரின் தற்காலிக சுல்தான் தமக்கு அடிக்கடி அறிவுறுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் நலன், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட மாநில நிர்வாகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களைப் பற்றி விவாதிக்க, ஜோகூரின் தற்காலிக சுல்தானை தாம் வாரத்திற்கு சில முறை சந்திப்பதாகவும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

“எனக்கு நிறைய வழிகாட்டுதல்களை வழங்கிய ஜோகூர் சுல்தான் மற்றும் ஜோகூரின் தற்காலிக சுல்தான் ஆகிய இருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமது நான்கு ஆண்டுக் கால ஆட்சியில் அவ்விருவரும் செய்த உதவிகள் அளப்பரியது என்றும் ஓன் ஹஃபிஸ் ஒப்புக்கொண்டார்.

மாநில அரசு நிர்வாகத்தில் ஜோகூர் அரண்மனை நிறுவனத்தின் பங்கு புதியதல்ல என்றும் அது பண்டைய காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக அமலில் உள்ளதாக அவர் விளக்கினார்.

2022-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி இஸ்தானா புக்கிட் செரீனில் அப்போது 44 வயதான ஓன் ஹஃபிஸ் ஜோகூர் மாநிலத்தின் 19-வது மந்திரி புசாராக பதவியேற்றார்.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)