பொது

சம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம் - போலீஸ்

14/03/2026 11:50 AM

கோலாலம்பூர், 14 மார்ச் (பெர்னாமா) - பல வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வரும் சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன், சம்பந்தப்பட்ட அவ்விரு நபர்களையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில் சம்ரி வினோத் அளித்த அறிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.

அவரின் அறிக்கை, பொதுமக்களுக்கு பயம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொது அமைதியை சீர்குழைக்கும் நோக்கமுடையது என்பதால், குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 505 (B)-இன் கீழ் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எதிராக அவமதிப்பு அறிக்கைகளை வெளியிட்டது தொடர்பாக, 1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்‌ஷன் 4(1) இன் கீழ், சம்ரி வினோத் மீதான விசாரணை அறிக்கை பினாங்கு அரசு தரப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக முஹமட் காலிட் குறிப்பிட்டார்.

இதனிடையே, கெடா லங்காவியில் இந்துகளுக்கு புனித அடையாளமான திரிசூலத்தை காலால் மிதித்த குற்றத்திற்காக தமிம் டாஹ்ரி குற்றம் பதிவாகியுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 295-இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட அதன் விசாரணை அறிக்கை கெடா அரசு தரப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அவ்விரு நபர்களும் அடையாளம் காணப்பட்டு நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட பிறகு, விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று முஹமட் காலிட் விவரித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)