உலகம்

ஈரான் மீதான போர் தொடர்ந்தால் இந்தியா எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளலாம்

14/03/2026 04:43 PM

புது டெல்லி, 14 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களினால், மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடிக்கும் பதற்றம் தொடர்ந்தால் இந்தியா எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார ஆய்வாளர் ராஜன் குமார் தெரிவித்திருக்கிறார்.

எண்ணெய் விலை உயர்வு விவசாயம், போக்குவரத்து மற்றும் சேவைத் துறை உள்ளிட்ட பல தொழில்துறைகளைப் பாதிக்கும் என்று புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அனைத்துலக ஆய்வுகள் பள்ளியில் பேராசிரியராக பணிபுரியும் ராஜன் குமார் குறிப்பிட்டார்.

''போர் நீண்ட காலம் நீடித்தால், போர் தொடரும் வாய்ப்பு மிக மிக அதிகமாக இருந்தால், இந்தியா எரிசக்தி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். எரிசக்தி விலையில் மட்டுமல்ல, நடப்பு நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும். இது நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், பணவீக்கத்திற்கு வழிவகுக்கும், மேலும் இது நீண்ட காலத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு வழிவகுக்கும்,'' என்றார் அவர்.

ஈரான் ஹோர்முஸ் வர்த்தகத்தையும் வழியையும் முற்றிலுமாகத் தடுக்க முடிவு செய்தபோது, இந்தியாவில் ஒரு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் போர் தொடர்ந்தால் வரும் நாள்களில் எரிவாயு, எண்ணெய், உரம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று ராஜன் குமார் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)