தைப்பிங், 16 மார்ச் (பெர்னாமா) -- கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, பி.டி.பி.ஆர் எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் செயலாக்கத்தை கல்வி அமைச்சு முழுமையாக பரிசீலிக்கும்.
கற்றல் நடவடிக்கைகள் சீராக நடைபெறும் வகையில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் மாணவர்களைப் பாதிக்காமல் இருப்பதை கல்வி அமைச்சு உறுதிச் செய்யும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
''கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்காக சிறந்த முடிவை நாங்கள் எடுப்போம். மேலும், இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை அமைச்சரவை தெரிவிக்கும் முடிவுக்காக காத்திருப்போம்'', என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை தாமான் தாசிக்கில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் வோங் கா வோ இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதே வேளையில், பி.டி.ஆர் எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்யும் செயல்முறை தொடர்பில் அமைச்சரவையின் முடிவுக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)