ஷா ஆலம், 16 மார்ச் (பெர்னாமா) -- நாட்டின் பிரபல ஊடகவியலாளர் 90 வயதான அடிபா அமின் முதுமையடைந்தாலும், ஊடகத்துறையில் அவர் ஆற்றிய சேவை தொடர்ந்து நினைவுக்கூரப்படுகின்றது.
இன்று, சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள தமது இல்லத்தில், அடிபா அமினுக்கு Kasih@ஹவானா நிதி வழங்கப்பட்டதாக,
தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Kasih@ஹவானா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் 671-வது நபர் இவராவார் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பாக பிரதமர் துறை அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு, ICU JPM-இன் அன்பளிப்பும் அடிபாவுக்கு வழங்கப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
''எனவே, இன்று நாங்கள் வருகைப் புரிந்தது, முதலாவது, அவர் எப்படி இருக்கின்றார் என்பதை நேரில் பார்க்க. உடல்நலம் குறைவாக உள்ளார். தற்போது 90 வயதை எட்டிவிட்டார். அவரின் சகோதரருடன் சேர்ந்து வசிக்கின்றார். எனவே, எதுவாக இருந்தாலும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம். அவரின் உடல்நலம் சீராக இருக்க. ஏப்ரல் மாதத்தில் அவரின் சேவையை நினைவுக்கூறும் வகையிலும் ஊடகத்துறையில் அவர் ஆற்றிய சேவைகளுக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது'', என்றார் அவர்.
இதனிடையே, அடிபா உட்பட அவருடன் சமக்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை மதிக்குமாறும், ஊடகத்தின் தரம் மற்றும் நெறிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களின் உத்திகளை முன்மாதிரியாக பின்பற்றுமாறும், இத்துறையில் பணியாற்றும் இளம் தலைமுறையினரை அவர் கேட்டுக் கொண்டார்.
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில், அடிபா அமினின் குடும்ப சுமையைக் குறைக்க உதவும் வகையில் நிதியுதவியும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டதாக, ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)