பொது

தேசிய சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிக்கும் பரிந்துரை அறிக்கை இறுதிச் செய்யப்படும்

16/03/2026 05:56 PM

ஜாலான் பார்லிமன், 16 மார்ச் (பெர்னாமா) --  மே மாத மத்தியில் தேசிய சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பது குறித்த பரிந்துரை அறிக்கை இறுதி செய்யப்படுவதை, நாடாளுமன்ற சிறப்புத் தேர்வு செயற்குழு இலக்குக் கொண்டுள்ளது.

இன்று நடைபெற்ற அச்செயற்குழுவின் முதல் கூட்டத்திற்குப் பின்னர் அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோடு, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை விவரிக்க சில தொடர் கூட்ட தேதிகளை நிர்ணயிக்கவும் அது இணக்கம் தெரிவித்ததாக சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

வரும் மே 18-ஆம் தேது அந்த அறிக்கையை இறுதி செய்வதற்கு இலக்கு கொண்டு ஏப்ரல் 9, ஏப்ரல் 16, ஏப்ரல் 27 மற்றும் மே 4 ஆகிய தேதிகளில் அச்செயற்குழு கூடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அசாலினா கூறினார்.

''இன்றைய கூட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் மீண்டும் சந்திப்பது என்று முதலில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். இரண்டாவதாக, கல்வி நிபுணர்கள், சட்ட மற்றும் அரசியலமைப்பு கல்வி நிபுணர்கள் தங்கள் கருத்துகளை வழங்க அழைக்கப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது'', என்றார் அவர்.

இன்று, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பது தொடர்பான சிறப்புத் தேர்வு செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அசாலினா அவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு பிரச்சனைகளில் ஆர்வமுள்ள பல அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)