கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- நாட்டில் சாதனையாளர்களை அங்கீகரிப்பதில் மலேசிய சாதனைப் புத்தகம் முக்கிய பங்காற்றுகிறது.
சாதனையாளரை அங்கீகரிப்பது சாதாரண விவகாரம் அல்ல.
மாறாக, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் துல்லியமான சரிபார்ப்புகளுக்குப் பின்னரே, ஒவ்வொரு சாதனையாளரும் அங்கீகாரம் பெறுகிறார்.
அந்த வகையில், மலேசிய சாதனைப் புத்தகத்தின் பல்வேறு அம்சக் கூறுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் அதில் பணியாற்றும் ஒரே இந்திய அதிகாரியான மேனகா வடமலை.
மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இரண்டு பிரிவுகளாக ஆராயப்பட்டு, சரிபார்ப்பிற்கு அனுப்பி வைக்கப்படும்.
அதில் பல்வேறு செயல்முறைகள் பின்பற்றப்படும் என்று மேனகா வடமலை உதாரணத்துடன் விளக்கினார்.
உலக சாதனை புத்தகத்திற்கும் மலேசிய சாதனைப் புத்தகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட மேனகா இன்றளவும் பலருக்கு இது குறித்து குழப்பம் இருப்பதை சுட்டிக் காட்டினார்.
மேலும், இந்தியர்கள் மற்றும் இதர இனத்தவர்களின் சாதனைகள் இடம்பெற்றுள்ள துறைகள் குறித்தும் மேனகா இவ்வாறு விவரிக்கிறார்.
'''தனிநபர்களின் விண்ணப்பங்கள் அதிகம் வரும். தமிழர்கள் கல்வி சார்ந்து நிறைய சாதனைப் புரிந்திருப்பார்கள். மலாய்க்காரர்கள் விளையாட்டுத் துறையைச் சார்ந்து சாதனைப் படைத்திருப்பார்கள். சீனர்கள் இசை மற்றும் திறன் சார்ந்து சாதனைப் புரிந்திருப்பார்கள்,'' என்றார் அவர்.
இந்த புத்தகத்தில் இடம் பெறும் தனிநபருக்கு சமுதாயத்தில் பாராட்டும் புகழும் கிடைப்பதைத் தவிர்க்க முடியாது.
அதோடு, அவர்களின் சாதனைகள் மற்றொருவருக்கு ஊக்குவிப்பாக இருப்பது மட்டுமின்றி, அவர்களின் எதிர்காலத்திற்கு பல நன்மைகளை கொண்டு வருவதாக மேனகா குறிப்பிட்டார்.
''அவர்கள் சாதனைப் படைத்திருக்கிறார்கள் என்பது ஒன்று. சுயவிவரத்தில் இணைத்துக் கொள்ளலாம்.அதிகமாக வர்த்தகம் சார்ந்தவர்கள் வருகிறார்கள். இது அவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான கருவி. வாடிக்கையாளர்கள் நிறைய வருவதற்கு அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வார்கள்,'' என்றார் அவர்.
தனியார் அமைப்பாக செயல்படும் மலேசிய சாதனைப் புத்தகத்திற்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கின்றது என்றக் கூடுதல் தகவலையும் அண்மையில், பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பகிர்ந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)