புக்கிட் மெர்தாஜாம், 18 மார்ச் (பெர்னாமா) -- நாளை தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரையில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 15 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையும் என்று போலீஸ் எதிர்பார்க்கிறது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, பிளஸ் வழியாகச் செல்லும் வாகனங்களை உட்படுத்தி, போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, ஜே.எஸ்.பி.டி-இன் கணிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர், டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
''2024-ஆம் ஆண்டில் மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 12 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 13 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு 15 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழைந்து கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார் அவர்.
அக்காலக்கட்டத்தில், அமல்படுத்தப்படும் 'Op Selamat 26' நடவடிக்கை முழுவதும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பினாங்கு ஜே.எஸ்.பி.டி-இன் 380 அதிகாரிகளும் உறுப்பினர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அசிஸி கூறினார்.
இன்று, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள வடக்கு நோக்கிய ஜூரு டோல் கட்டண சாவடியில், மாநில 'Op Selamat 26' நடவடிக்கையை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)