கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- உள்ளூர் தமிழ் திரைப்படங்கள், தொழில்நுட்பம், கதாபாத்திரங்கள், கதை, திரைக்கதை என பல அம்சங்களில் வளர்ச்சிக் கண்டு வருகின்றன.
வளர்ச்சியும் மாற்றங்களும் கொண்ட மலேசிய திரைப்படத் துறையில், தற்போது அதிகமான இளைஞர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு இயக்குநராக களம் இறங்குகிறார் மலேசிய கலைஞரான ஷேபி என்று அறியப்படும் சரத் நாயர்.
மலேசியத் திரைப்படம், குறும்படம், இணைய தொடர் நாடகங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்திருக்கும் ஷேபி, தமது திறமையால் படிப்படியாக மலேசிய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிப்புத் துறையில் இருக்கும்போதே இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இருந்ததாக ஷேபி கூறினார்.
அதற்கு சரியான நேரம் வரும் வரை காத்திருந்ததாகவும், தமது புதிய முயற்சிக்கு கலைத் துறையில் உள்ள இளம் இயக்குநர்கள் தமக்கு முன்னோடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
''கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட நிறைய இளைஞர்கள் என்னிடம் திரைப்படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டனர். நீங்கள் இயக்கும் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் என்னிடம் கேட்கும் போது இதுதான் சரியான நேரம் என்று நான் யோசித்தேன்,'' என்றார் அவர்.
இவ்வாண்டு இறுதியில் படப்படிப்பை தொடங்கவுள்ளதாக கூறிய ஷேபி, அதற்கான கதையை உருவாக்குவதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
70 விழுக்காடு உண்மை சம்பவங்களை கொண்டு இயக்கப்படும் இப்படத்தில் மலேசிய கலைஞர்கள் உட்பட இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்களும் நடிக்கவுள்ளனர்.
இதனிடையே, தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தமது படைப்பில் அதன் பயன்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.
''கண்டிப்பாக பயன்படுத்துவேன். எனினும், அதனை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். நாம் ஒரு படைப்பை வழங்கும்போது முழுமையாக ஏ.ஐ இருந்தால், நமது பங்கு எவ்வளவு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்,'' என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், திரைப்பட இயக்கத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்தாலும், மலேசியா மற்றும் இந்தியாவில் திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்க்காணலின் போது, ஷேபி இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)